Thursday, May 24, 2018

Ashtapadi part4 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி 4

அஷ்டபதி 4
1.சந்தனச்சர்சித நீலகளேபர பீதவஸனவனமாலீ
கேளிசலன் மணிகுண்டலமண்டித கண்ட யுகஸ்மிதசாலீ 
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி கேளிபரே ( த்ருவபதம் )

கிருஷ்ணன் கோபியருடன் ராஸலீலை செய்வதை தோழி வர்ணிக்கிறாள்.

சந்தனச்சர்சித –சந்தனம் பூசிய 
நீலகளேபர- நீல மேனியுடன் 
பீதவஸன- பீதாம்பரம் தரித்து
வனமாலீ- வனமாலை அணிந்தவனாய் 
கேளிசலன் மணிகுண்டல- அவன் ஆடும்போது அசையும் மணிகுண்டலங்கள் 
மண்டித கண்ட யுகஸ்மிதசாலீ-இரு கன்னங்களிலும் விளங்க 
விலாசினி- அழகியவளே 
ஹரிரிஹ- ஹரி இங்கு 
முக்த வதூநிகரே – இளம் பெண்கள் கூட்டத்தில் 
கேளிபரே – விளையாடுபவனாக 
விலஸதி- விளங்குகிறான்

நீலவண்ண மேனியில் சந்தனப் பூச்சு. இடையில் பீதாம்பரம். மார்பில் வனமாலை. கண்ணன் கோபியருடன் ஆடும்போது அவனுடைய மணிகுண்டலங்கள் அழகாக அவன் கன்னங்களில் அசைகின்றன. இவ்வாறு அவன் இளம்பெண்கள் கூட்டத்தில் விளையாடுவதை வர்ணிக்கும் அஷ்டபதி இது.

2.பீனபயோதரபாரபரேண ஹரிம் பரிரப்ய ஸராகம்
கோபவதூரனுகாயதி காசித் உதஞ்சித பஞ்சமராகம் 
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி 
கேளிபரே(dhruvapadham)

கோபவதூ:- கோபியரில்
காசித் – ஒருத்தி
பீனபயோதரபாரபரேண- தன் பருத்த மார்பினால் 
ஹரிம்- கண்ணனை
ஸராகம்- காதலுடன் 
பரிரப்ய –தழுவிக்கொண்டு 
உதஞ்சித பஞ்சமராகம்-பஞ்சம ஸ்வரத்தை ஜீவஸ்வரமாகக் கொண்ட ராகத்தில் 
அனுகாயதி- பாடுகிறாள்

ஸ்ருங்கார ரஸத்தை பிரதிபலிக்கும் ராகங்கள் பஞ்சம ஸ்வரத்தை மையமாகக் கொண்டவை. பரதரின் நாட்ய சாஸ்த்ரத்தின்படி 'பஞ்சமம் மத்யபூயிஷ்டம் ஹாஸ்யஸ்ருங்காரயோ: பவேத் .' சிருங்காரம் ஹாஸ்யம் இந்த ரஸங்களுக்கு பஞ்சமத்தை மையமாக்க் கொண்ட ராகங்கள் பொருத்தமானவை. அதனால் தான் குயில் பஞ்சமஸ்வரத்தில் கூவுவதால் அது காதலைத் தூண்டுவதாகக் கருதப்படுகிறது'

3.காபி விலாஸவிலோலவிலோசன கேலனஜனிதமனோஜம்
த்யாயதி முகதவதூரதிகம் மதுசூதன வதன ஸரோஜம்
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி கேளிபரே

காபி முக்தவதூ: ஒரு அழகிய கோபி 
விலாஸவிலோலவிலோசன கேலனஜனிதமனோஜம்- கண்ணனின் கண்களுடைய சலனத்தால் ஈர்க்கப்பட்டு காதல் மேலிட்டு 
மதுசூதன வதன ஸரோஜம்- கண்ணனின் முகத்தாமரையில்
த்யாயதி அதிகம் – மிகவும் ஆழ்ந்துவிட்டாள்.

4.. காபி கபோலதலே மிலிதா லபிதும் கிமபி ஸ்ருதிமூலே 
சாரு சுசும்ப நிதம்பவதீ தயிதம் புலகைரனுகூலே 
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி கேளிபரே

காபி நிதம்பவதீ- இடை அழகுள்ள ஒருத்தி
கபோல தலே மிலிதா-அவனுடைய கன்னத்தின் அருகில் வந்து 
புலகை:அநுகூலே – புலகாங்கிதம் அடைந்து 
ஸ்ருதிமூலே- அவன் காதருகில் 
லபிதும் கிமபி – ஏதோ சொல்பவள் போல 
சாரு சுசும்ப – முத்தமிட்டாள்

5.கேளிகலாகுதுகேன ச காசித் அமும் யமுனாஜலகூலே 
மஞ்சுளவஞ்சுளகுஞ்சகதம் விசகர்ஷ கரேண துகூலே 
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி கேளிபரே

காசித் -ஒரு கோபி
கேளிகலாகுதுகேன – கண்ணனுடன் விளையாட ஆசைகொண்டு
யமுனாஜலகூலே – யமுனைக்கரையில்
மஞ்சுளவஞ்சுளகுஞ்சகதம்- லதாக்ருஹத்தில் உள்ள 
அமும்- அவனை
கரேண- கையால் 
துகூலே – வஸ்திரத்தைப பிடித்து
விசகர்ஷ- இழுத்தாள்

6.கரதலதால தரள வலயாவளி கலிதகலச்வனவம்சே
ராஸரஸே ஸஹந்ருத்யபரா ஹரிணா யுவதி: பிரசசம்ஸே
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி கேளிபரே

யுவதி:- ஒரு பெண் 
ராஸரஸே- ராஸ லீலையில்
ஸஹந்ருத்யபரா-கண்ணனுடன் கூட ஆடுபவளாய்
கலிதகலச்வனவம்சே – கண்ணனின் புல்லாங்குழல் கீதத்திற்கு சரியாக 
தரள வலயாவளி – சப்திக்கும் தன்னுடைய வளைகளால் 
கரதலதால- தாளம் போட்டுக்கொண்டு
ஹரிணா- கிருஷ்ணனால் 
ப்ரசசம்ஸே-பாராட்டப்பட்டாள்

இந்த இடத்தில் தேசிகரின் கோபாலவிம்சதி ஸ்லோகம் ஒன்றைக்காண்போமா?

ஜயதி லலிதவ்ருத்திம் சிக்ஷிதோ வல்லவீனாம் 
சிதில வலய சிஞ்ஜா சீதலை: ஹஸ்ததாலை: 
அகிலபுவனரக்ஷாவேஷ கோபஸ்ய விஷ்ணோ:
அதர மணிஸுதாயாம் அம்சவான் வேணு நால; (கோ. வி-16)

இதன் பொருள்:
உலகத்தை எல்லாம் காக்க இடையன் வேஷம் கொண்ட விஷ்ணுவான கண்ணனின் புல்லாங்குழலில் இருந்து வந்த நாதமானது கோபியரின் வளையல்களின் தாளத்தை ஒட்டி நாட்டிய கதியை ஒத்திருந்தது. சாதாரணமாக கீதத்திற்கேற்ப தாளம் வாசிக்கப்படும். இங்கு தாளத்தை ஒட்டி கீதம் அமைகிறது, அதாவது பகவான் பக்தர்கள் போடும் தாளத்திற்கு ஆடுகிறான் என்பது அவன் பக்தவாத்சக்யத்தைக் கூறுகிறது.

7.ச்லிஷ்யதி காமபி சும்பதி காமபி காம்பி ரமயதி ராமாம் 
பச்யதி ஸ ஸ்மித சாருதராம் அபராம் அனுகச்சதிவாமாம்
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி கேளிபரே

ஸ: - கண்ணன் 
காம்பி- ஒரு கோபியைச்லிஷ்யதி-தழுவி
சும்பதி காமபி- இன்னொருத்தியை முத்தமிட்டு
காமபி ராமாம் ரமயதி – இன்னொருத்தியுடன் விளையாடுகிறான்
ஸ்மிதசாருதராம்- அழகிய புன்சிரிப்புடன் கூடிய ஒருத்தியை 
பச்யதி- பார்க்கிறான் 
அபராம் வாமாம் – இன்னொரு அழகியை 
அனுகச்சதி- தொடர்கிறான்.

எல்லா கோபியரிடமும் ஒரேவிதமான அன்பு கொண்டுள்ளான் கண்ணன் என்பதை தெரிவிக்கும் ஸ்லோகம் இது. கீதையில் 'ஸமோ அஹம் சர்வபூதேஷு ந மே த்வேஷ்யோ அஸ்தி ந ப்ரிய:'- எல்லா உயிர்களும் எனக்கு ஒன்றுதான்., அன்பன் பகைவன் என்ற வேறுபாடில்லை. என்று சொல்கிறான். இதைப் புரிந்துகொள்ளாமல் நாம் ராதையைப் போல் அவன் பாரபட்சம் பார்ப்பவன் என்று நினைத்து அவனிடம் இருந்து விலகிச்செல்கிறோம்.

8.ஸ்ரீ ஜெயதேவபணிதம் இதம் அத்புத கேசவகேளிரஹஸ்யம் 
பிருந்தாவனவிபினே லலிதம்விதநோது சுபானி யசஸ்யம் 
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி கேளிபரே

ஸ்ரீஜயதேவபணிதம் – ஜெயதேவரால் புனையப்பட்ட 
பிருந்தாவனவிபினே லலிதம்- அழகிய பிருந்தாவனத்தில் நடைபெற்ற
அத்புதகேலி ரஹஸ்யம் – கண்ணனின் அத்புதமான ராசலீலை என்ற ரஹஸ்யம்
இதம்- என்ற இந்த கவிதை
சுபானி யசஸ்யம்- மங்கலமான மேன்மையை 
விதநோது- விளைவிக்குமாக.

அத்புத கேலி ரஹஸ்யம் என்பதன் பொருள் என்ன என்று பார்க்கலாம்.
முக்திக்கு இரண்டு வழிகள் சொல்லப் பட்டிருக்கின்றன., முதலாவது ரஸாஸ்வாதம் பிரேம பக்தி. மற்றது ஞான மார்க்கம்.
'ரஸோ வை ஸ: ரஸம் ஹோவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி. ' அதாவது பிரம்மமே ரஸம். பிரம்மத்தை அடைந்தால் ஆனந்தம் பெறலாம். ரஸம் , ஆனந்தம், பிரம்மம் எல்லாம் ஒன்றே.

கோபியர் , மீரா ஆண்டாள் இவர்களுடைய பக்தி மதுர பக்தி., எளிதானது. ஆழ்வார்களும் நாயக நாயகி பாவத்தி ஆழ்ந்து அனுபவித்துள்ளனர்.

பக்தியின் ரஸங்கள் தாஸ்ய, சக்ய, வாத்சல்ய , மதுர, சாந்த என்று ஐந்து வகைப்படும்.இதற்கு உதாரணங்கள் ஹனுமான் தாஸ்யம் , உத்தவர் சக்யம்,யசோதை வாத்சல்யம் , ராதை மதுரம், முனிவர்கள் சாந்தம்.

ராஸக்ரீடை ரஹஸ்யம் என்னவென்றால், ஜீவன் பிரம்மத்துடன் சேர்ந்து அனுபவிக்கும் ஆனந்தமே. யோகிகள் இந்த உலகத்தையே பிருந்தாவ்னமாகக் காண்கிறார்கள். பகவானின் சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் என்ற லீலைதான் ராஸலீலை. அவன் அணித்து ஜீவராசிகளுடனும் கைகோர்த்து நிற்கிறான். நம் எண்ணங்கள் எல்லாம் அவனைப்பற்றியே ஆகுமானால் அவைதான் கோபியர். ஒவ்வொரு கோபியரிடையிலும் ஒவ்வொரு கண்ணன் . எல்லா எண்ணங்களும் சேர்ந்து ஒருமுகமானால் அதுதான் ராதை. ராதை கண்ணன் சங்கமமே ஜீவபிரம்ம சங்கமம்.


No comments:

Post a Comment